Sorting by

×

சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் மின்சார ரயிலில் தினசரி பயணித்து வருகின்றனர்.

இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் ரயில் நிலையங்கள் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன.

பராமரிப்புப் பணி

இதற்கிடையில், ரயில் சேவையில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற முறையில் ரயில் இயக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், சென்னை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், “நாளை ஒரு சிறந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைப் பெறுவதற்காக, இன்று ஏற்படும் தற்காலிகச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சென்னை கோட்டம் மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறது.

இந்த அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் முடிக்க இத்தகைய தற்காலிக மாற்றங்கள் மிகவும் அவசியமானவை.

ரயில்வே நிர்வாகம் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரயில்வே செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், ரயில்கள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

மின்சார ரயில்

இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன. அனைத்து ரயில் இயக்கங்களும் உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். இந்த மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இயக்கவியல் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, தற்காலிக ஏற்பாடுகளைச் சீராகச் செயல்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பின் மூலம் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் உறுதி செய்யப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *