மெக்சிகோவின் மலைச்சரிவுகளில் அவகேடோ பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன், பின்னாளில் ஒரு நாட்டின் ராணுவத்தையே நடுங்க வைப்பான் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.
வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க அவன் கையில் எடுத்த ஆயுதம், இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. அவன்தான் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், உலகம் இவனை ‘எல் மென்சோ’ என்று நடுக்கத்துடன் அழைக்கிறது.
மெக்சிகோவின் மைக்கோகன் மாகாணத்தில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெமேசியோவிற்கு, பசி மட்டுமே அன்றாடத் துணையாக இருந்தது.

அமெரிக்காவில் சிறை
வறுமையின் காரணமாக ஐந்தாம் வகுப்போடு கல்வியைத் துறந்தவன், தனது 14 வயதில் கஞ்சாத் தோட்டங்களைக் காவல் காக்கும் பணியில் சேர்ந்தபோதுதான், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தான். அங்கே போதைப்பொருள் விற்ற குற்றத்திற்காக சான் பிரான்சிஸ்கோ போலீஸாரிடம் சிக்கி சிறைத் தண்டனை பெற்றதே அவனது வாழ்க்கையின் முதல் கறுப்புப் பக்கம்.
சிறையிலிருந்து விடுதலையாகி மெக்சிகோ திரும்பியவன் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவன் ஜாலிஸ்கோ மாநில காவல்துறையில் ஒரு காவலராகப் பணியில் அமர்ந்து, அதிகாரத்தின் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டான்.

பகலில் சீருடை அணிந்து சட்டத்தைப் பாதுகாப்பது போல நடித்தாலும், இரவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் காவல்துறையின் நகர்வுகளை ரகசியமாக விற்று வந்தான். இந்த இரட்டை வாழ்க்கை அவனுக்குப் பெரும் லாபத்தையும், நிழல் உலகத் தொடர்புகளையும் அள்ளிக் கொடுத்தது. ஒருகட்டத்தில் ஒரு பெரிய கடத்தல் கும்பல் தலைவனின் மகளையே திருமணம் செய்துகொண்டு அந்த சாம்ராஜ்யத்தின் முக்கிய வாரிசாக உருவெடுத்தான்.
2010-ல் தனது சொந்த அமைப்பான ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) தொடங்கியபோது, அவன் ஒரு சாதாரண ரவுடியாக இருக்க விரும்பவில்லை. ஒரு ராணுவத் தளபதியைப் போலத் தனது ஆட்களுக்குப் பயிற்சி அளித்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஒரு சிறு நாட்டை எதிர்க்கும் அளவுக்குத் தனது படையைப் பலப்படுத்தினான்.
2015-ல் தன்னைத் துரத்தி வந்த ராணுவ ஹெலிகாப்டரையே ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்டு வீழ்த்தியபோது, ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ச்சியில் உறைந்தது. இதன் மூலம் மெக்சிகோவின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சில ஆண்டுகளிலேயே தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தான்.
நெமேசியோவின் மூளை ஒரு கார்ப்பரேட் சி.இ.ஓ-வைப் போலச் செயல்பட்டது. ‘ஃபெண்டானில்’ எனும் உயிருக்கு ஆபத்தான போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் கடத்துவதில் அவன் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தினான்.

இதன் மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் (₹1.6 லட்சம் கோடி) சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரக் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பிடித்தான். இவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு அமெரிக்கா 125 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தும், அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருந்து பல ஆண்டுகள் அரசாங்கத்தைச் சவாலுக்கு இழுத்தது இவனது தந்திரம்.
எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், காலம் அவனுக்குச் சிறுநீரகக் கோளாறு என்ற வடிவில் ஒரு பின்னடைவைத் தந்தது. உடல்நலக் குறைவால் நடமாட்டத்தை குறைந்த அவன், காடுகளுக்குள் ரகசிய மருத்துவமனை அமைத்துத் தலைமறைவாக இருந்தான். இறுதியாக, பிப்ரவரி 2026-ல் ஒரு ரகசிய உளவாளி, மற்றும் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் அவனது மறைவிடத்தைச் சூழ்ந்தது.

தப்பிக்கும் வழியின்றி நடந்த அந்தப் பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்தான். அவனை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் வழியிலேயே அவனது மூச்சு நின்றது. ஒரு ஏழை விவசாயியாகத் தொடங்கி, உலகையே அச்சுறுத்திய ஒரு கொடூர சகாப்தம் அத்தோடு முடிவுக்கு வந்தது.!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
