Sorting by

×

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், கடைசி மூன்று கட்டத் தேர்தலுக்கான பிரசாரங்கள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பா.ஜ.க-வுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் பல்வேறு மாநிலங்களுக்கு பறந்து பறந்து பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர். `இந்தியா’ கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணிED-ன் கடும் எதிர்ப்பை மீறி இடைக்கால ஜாமீன்… `இந்தியா’ கூட்டணிக்கு பலம் சேர்ப்பாரா கெஜ்ரிவால்?!தலைவர்களின் நம்பர் கேம்!

தலைவர்களின் பிரசாரங்களில், `யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும்?’ என்ற நம்பர் கணக்குள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய சமயத்தில், `பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நிச்சயம் 400 இடங்களை வெல்லும்’ என்றார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியோ, `பா.ஜ.க 150 இடங்களில்கூட வெல்வது கடினம்’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தன் பங்குக்கு, `பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தலில் 190 முதல் 195 சீட் வரை மட்டுமே கிடைக்கும். இந்தியா கூட்டணி 315 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும்’ என்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `சிறையிலிருந்து வந்த பிறகு மக்களிடமும், தேர்தல் ஆலோசகர்களிடமும் பேசினேன். பா.ஜ.க 230 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெல்லாது. இதை நான் எழுதித் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

`270 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம்!’

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரத்தில் ஒரு விஷயத்தை முன்வைத்திருக்கிறார். மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், “நான்கு கட்டங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. மேற்குவங்கத்தில் 18 தொகுதிகள் உள்பட மொத்தம் 380 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதில், பெரும்பான்மைக்கு (272 என்பது பெரும்பான்மை… அமித் ஷா தோராயமாக குறிப்பிட்டிருக்கிறார்) தேவையான 270 இடங்களைப் பிரதமர் மோடி கைப்பற்றிவிட்டார். அடுத்தடுத்த கட்டங்களில், 400 தொகுதிகளை நோக்கி நகர்வதுதான் நமது இலக்கு” என்றிருக்கிறார்.

மல்லிகார்ஜூன கார்கே.`இந்தியா கூட்டணிதான் முன்னிலை பெற்றிருக்கிறது!’

அமித் ஷாவின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பா.ஜ.க 200 தொகுதிகளைக்கூட தாண்டாது. தோல்வி பயம், பதற்றத்தால் பா.ஜ.க தலைவர்கள் இப்படியான நம்பர்களை கூறி வாக்கு சேகரிக்கின்றனர். நான்கு கட்டத் தேர்தலின் முடிவில் இந்தியா கூட்டணிதான் முன்னிலை பெற்றிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரஷித் அல்வி, “400-ஐ மறந்துவிடுங்கள்… பா.ஜ.க-வால் 200 தொகுதிகள்கூட வெல்ல முடியாது. வாக்கு இயந்திரங்களில் ஏதாவது விளையாடினால் மட்டுமே அவர்களால் 200 தொகுதிகளைத் தாண்ட முடியும்” என்று பகீர் கிளப்பியிருக்கிறார்.

அமித் ஷா பேச்சின் பின்னணி?

தேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே 400 தொகுதிகளை வெல்வோம் என்பதை அடிக்கடி சொல்லி வந்தனர் பா.ஜ.க தலைவர்கள். `பா.ஜ.கதான் மீண்டும் வெல்லப் போகிறது’ என்ற பிம்பத்தை மக்கள் மனதில் பதியவைத்து, அதன்மூலம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதற்காகவே இதைச் செய்தனர். அதே யுக்தியைத்தான் இப்போதும் அமித் ஷா கையாண்டிருக்கிறார். `பா.ஜ.க வெல்வது உறுதியாகிவிட்டது. இனி இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதில் பயனில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்பதை மறைமுகமாக இப்படிச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா” என்கின்றனர்.

அமித் ஷா`கெஜ்ரிவால் பேசியது உச்ச நீதிமன்றத்தின்மீதான அப்பட்டமான அவமதிப்பு!’ – அமித் ஷா

பா.ஜ.க நிர்வாகிகளோ, “அமித் ஷா, அரசியலில் சாணக்கியர் என்பது இந்தியாவுக்கே தெரிந்த விஷயம். மக்களின் மனநிலையையும், களநிலவரத்தையும் உணர்ந்துதான் அவர் இதைச் சொல்லியிருக்கிறார். அவர் கணிப்பு சரியாகத்தான் இருக்கும்” என அடித்துச் சொல்கின்றனர்.

அமித் ஷாவின் கணிப்பு பலிக்குமா… இல்லை இந்தியா கூட்டணியின் கணிப்பு பலிக்குமா… என்பதையெல்லாம் ஜூன் 4 வரை பொறுத்திருந்து பார்ப்போம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *