Sorting by

×

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 தேர்தல்களிலும் திமுக ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதனால், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது உடுமலைப்பேட்டை தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்பது கட்சித் தலைமையின் உத்தரவு.

குறிப்பாக உடுமலைப்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது.

உதயநிதி

இதற்காக வேட்பாளர் தேர்விலும் கட்சித் தலைமை கறார் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, உடுமலைப்பேட்டைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம், இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் திறப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கியது, உயிரிழந்த நிர்வாகிகளின் உருவப் படம் திறப்பு என ஒரு நாள் முழுவதும் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தார்.

உதயநிதி உடுமலைப்பேட்டை திடீர் விசிட் பின்னணியில் என்ன நடந்துள்ளது என திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. காங்கேயம், தாராபுரம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள்தான் திமுக-விடம் உள்ளது. இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென திமுக முனைப்பு காட்டி வருகிறது.

அதிலும், திமுக-வின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷாவின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டை தொகுதியில் 25 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாததை கெளரவம் சம்பந்தப்பட்ட விசயமாக கட்சித் தலைமை பார்க்கிறது. இதனால், வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட உடுமலைப்பேட்டை தொகுதியை மிக மிக கவனமாக கையாள முடிவு செய்துள்ளது.

இதற்காக கடந்த மாதம் உடுமலைப்பேட்டை தொகுதியில் முகாமிட்ட பென் டீம் உட்கட்சி பிரச்னை, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வேட்பாளராக நிறுத்துவோர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? தொகுதிக்குள் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு? போன்றவை குறித்து அலசி ஆராய்ந்து தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

மேலும், உளவுத்துறை தனியாகவும் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதில், உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

உடுமலைப்பேட்டையில் உட்கட்சி பிரச்னை தலைவிரித்து ஆடுவதால், அதிமுக-வை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதுதான் பென் டீம் மற்றும் உளவுத்துறை ரிப்போட்டாக உள்ளது. அதன்படி பார்த்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லாதவரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமாரைத்தான் தலைமை டிக் அடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

உதயநிதி

ஏனென்றால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் ஜெயக்குமாரைத்தான் உதயநிதி அறிவித்தார். ஆனால், சில உட்கட்சிப் பிரச்னையால், ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார். தனது அணியில் இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென உதயநிதி விரும்புகிறார். அதன் பின்னணியில்தான் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ஈஸ்வரசாமி அழைப்பை ஏற்று உடுமலைப்பேட்டைக்கு வந்த உதயநிதி, தனது ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காகவும், ஜெயக்குமாரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.

அத்துடன் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கணியூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், இதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு வரும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமாக உதயநிதி பேசினார். எதுவாக இருந்தாலும் நாமும் முயற்சித்து பார்ப்போம் என மறுபுறம் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி ஆ.ராசா, எ.வ.வேலு மூலமும், ஷியாம் பிரசாத் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதன் மூலமும், அடிவள்ளி முரளி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை மூலமும் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர்” என்கின்றர் விரிவாக.!

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *