Sorting by

×

TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் – சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. ‘தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந்துகிறோம்’ என ஒற்றை வார்த்தையில் கடந்து விட்டது தேர்வாணையம்.

‘வருடக் கணக்கில் கடுமையாக முயற்சி செய்த லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பு இல்லையா, இவ்வளவு அலட்சியமாகவா இருப்பார்கள்’ என எழுந்த சந்தேகத்துடன் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்சி தரும் மையங்கள், தேர்வாணையத்துடன் தொடர்பிலிருந்த சிலர் என பல தரப்பிலும் பேசினோம்.

தேர்வு ரத்து செய்யப்பட்டது சாதாரணம் என்பது போல பல மடங்கு அதிர்ச்சி உள்ளே காத்திருந்தது. தேர்வாணையம் மூலம் தேர்வாகி தற்போது அரசுத் துறையில் உயர் பதவியிலிருக்கும் அந்த அதிகாரி பேசியதெல்லாம் ‘அட கடவுளே’ ரகம்தான்.

tnpsc exam
tnpsc exam

தலைவரும், 14 உறுப்பினர்களும்!

“பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்பது அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட சுதந்திரமான அமைப்பு. ஆர்டிகிள் 316 முதல் 319 வரையிலான பகுதியில் இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், அரசு ஊழியர்கள் நிரந்தரமாக இருப்பவர்கள். அதனால் அவர்கள் திறமையானவர்களாக, நேர்மையானவர்களாக இருந்து அரசு இயந்திரத்தை நகர்த்த வேண்டும் என்பதாலேயே கமிஷனுக்கு தனி அதிகாரம் கொடுத்து அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து தரச் சொல்கிறார்கள்.

அதேநேரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இதில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு பரிந்துரைக்க வேண்டும் என இருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்களுடைய கட்சிக்காரர்களை கமிஷனுக்குள் நுழைத்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதாலேயே ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க உத்தரவிட்டிருக்கிறது.

அதிகாரப் பரவலாக்கல் என்றால் இப்படித்தான் இருக்கும்.

நம்ம டி.என்.பி.எஸ்.சி.க்கு வருவோம். தலைவர் மற்றும் அவருடன் சேர்த்து 14 உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமைப்புதான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தலைவரையும் இதர உறுப்பினர்களையும் தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க, ஆளுநர் நியமிக்க வேண்டும்.

தலைவரும் 14 உறுப்பினர்களும் கல்வியாளர்கள், பணியிலிருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அரசு பரிந்துரைக்க, ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

இவர்கள் தவிர, அரசின் நிரந்தரப் பிரதிநிதியாக செயலாளர், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், இதர ஊழியர்களும் இருப்பார்கள்.

TNPSC
TNPSC

அரசு கை காட்டிய காக்கி, நோ சொன்ன கவர்னர்

அரசு தரப்பிலிருந்து காலிப் பணியிடங்கள் குறித்து விபரங்கள் ஆணையத்துக்கு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். தேர்வை நடத்தி ஆட்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் ஆணையம் சுதந்திரமாக செய்யும். தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கே முடிவெடுக்கிற அதிகாரம்.

இன்றைக்கு தேதியில் தலைவர் இருக்கிறார் ஆனால் 14 உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதாவது 8 உறுப்பினர் பதவி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

எவ்வளவு நிர்வாக அலட்சியம் இருந்தால் இந்த மாதிரி ஒரு நிலையில் ஆணையத்தை வைத்திருப்பார்கள்? ஆட்சியாளர்களால் திறமையான, நேர்மையான, இதற்குத் தகுதியான நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நிர்வாக அலட்சியம் தானே காரணமாக இருக்க முடியும்.

போதாக்குறைக்கு மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான முரண்பாடும் சேர்ந்துகொண்டிருக்கிறது. தமிழக அரசு பரிந்துரைத்த நபர்களை கவர்னர் நிராகரிப்பது இன்னொரு புறம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆணையம் தலைவர் இல்லாமலேயே இயங்கிக்கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபுவை அரசு ஆணையத்துக்கு தலைவராக பரிந்துரைக்க, அதற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு கடைசியில் என்ன நினைத்ததோ 2024 கடைசியில் இப்போது இருக்கிற எஸ்.கே. பிரபாகரை நியமித்தது.

காலியாக இருக்கிற எட்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு எப்போது விடிவு காலம் வருமோ தெரியவில்லை” என்றார் அவர்.

Sylendra Babu IPS

வழக்கில் ஆஜரானதற்கு பரிசா?

சில சமயங்களில் ஆட்சியாளர்கள், வாரியங்கள் போன்ற மற்ற சில அமைப்புகளைப் போல, இங்கும் தங்கள் சொல் கேட்கும் நபர்களை நியமிக்கும் போக்கும் இருந்ததாம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருக்கு வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணணை தலைவராக நியமித்ததைச் சுட்டிக்க்காட்டும் சில தேர்வர்கள், அதே நேரம் ஜெயலலிதாவாவால் இன்னொரு முறை நியமிக்கப் பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி நட்ராஜின் பணிக் காலத்தில் தேர்வாணையத்தின் நல்ல சில விஷயங்களும் நடந்தன என்பதையும் மறுக்கவில்லை.

இன்றைய சிக்கல்களுக்கு தீர்வு தான் என்ன?

‘அரசுப் பணிகளில் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப் படம்ணும்கிற உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கணும். அதேபோல நடுநிலையாளர்களை ஆணையத்துக்கு நியமிச்சு ஆணையம் சரியா இயங்க நடவடிக்கை எடுக்கணும். ஆளுநரும் அரசும் அரசியல் பண்ணாம இருந்தாலே போதும்’ என்கின்றனர் கல்வியாளர்கள்.

exam for govt job

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நுழைந்தால்,

‘சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம்’ என்கிற வாசகங்கள் பளிச்சிடுகின்றன.

உயரிய நோக்கம்தான், ஆனால் யார் செயல்படுத்துவது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *