பிரதமர் மோடி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டபோது, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியிலும் வேட்பாளராகக் களமிறங்கினார். இதில், வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் மோடி வெற்றிபெற்றார்.
பிரதமர் மோடி
அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணைய விதிப்படி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் ஒன்றில் எம்.பி பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென்பதால் தனது சொந்த மாநில தொகுதியான வதோதராவில் ராஜினாமா செய்துவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய வாரணாசி தொகுதியில் எம்.பி-யாகத் தொடர்ந்தார். 2019 தேர்தலில் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிட்டு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை நோக்கி வாரணாசியில் மூன்றாவது முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி போட்டியிடுகிறார்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜூன் 1-ம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் மே 7-ம் தேதி தொடங்கிய நிலையில், அதன் கடைசி நாளான இன்று வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய மோடி தயாரானார். காலையில் காலபைரவர் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, காலை 11:40 முதல் 12 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். இந்தக் குறிப்பிட்ட நேரம் புனிதமான புஷ்ய நட்சத்திரம் மற்றும் கங்கா சப்தமியுடன் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi files nomination from Varanasi Lok Sabha seat for #LokSabhaElections2024
Uttar Pradesh CM Yogi Adityanath is also present on the occasion. pic.twitter.com/woWNPgqdiG
— ANI (@ANI) May 14, 2024
மேலும், மோடியின் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு அவரை ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு, ஜி.கே.வாசன், அன்புமணி, சிரக் பஸ்வான், பவன் கல்யாண் என பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் மற்றும் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி என்பவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மோடி, ஆட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்த நால்வர் யாரென்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மோடி வேட்புமனு தாக்கல்செய்யும்போது அருகிலிருந்த பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரியும் அதில் ஒருவர். பிராமணரான இவர்தான் அயோத்தியில் கடந்த ஜனவரியில் திறக்கப்பட்ட ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வுக்கு நல்ல நேரம் குறித்துக் கொடுத்தவர்.
பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி – மோடி – வாரணாசி
மற்ற மூன்று பேரில், பைஜ்நாத் படேல் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் லால்சந்த் குஷ்வாஹா ஆகியோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். நான்காவது நபரான சஞ்சய் சோன்கர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய சஞ்சய் சோன்கர், “காலையில்தான் எங்களுக்கு இந்தத் தகவல் கிடைத்தது. கட்சித் தொண்டன் என்ற முறையில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்து வருகிறேன். அப்படியிருக்க, இவ்வளவு பெரிய பொறுப்பை பா.ஜ.க எனக்கு வழங்கியதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
மோடி வேட்புமனு தாக்கல் – வாரணாசி
பொதுவாக, ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றால் அவர் சார்ந்திருக்கும் கட்சி மாநில அல்லது தேசிய கட்சியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஒருவர் அந்த வேட்புமனுவை முன்மொழிய வேண்டும். இதுவே வேட்பாளர் சுயேச்சை அல்லது அங்கீகரிக்கப்படாத கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் 10 பேர் அவரின் வேட்புமனுவை முன்மொழிய வேண்டும். முக்கியமாக, தேர்தல் ஆணைய விதிகளின்படி முன்மொழிபவர் அந்த வேட்பாளரின் வேட்புமனுவை அங்கீகரிக்கும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதியின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும்.
“அவமானப்படுத்தப்படுவேன் எனப் பயந்தேன்..!” – பாஜக-வின் ராமர் கோயில் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில்
