கோவையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது, ஏராளமான சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை பாரபட்சமாக நடத்தப்பட்டதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம், கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாருக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது, “ஓட்டு என்பது எப்படி அடிப்படை ஜனநாயக உரிமையோ, அதேபோல போட்டியிடும் உரிமையும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். ஆனால் தேர்தலில் போட்டிபோடும் உரிமை என்பது அதிகாரம் மிக்கவர்களுக்கு ஒரு விதமாகவும், சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும் கடைபிடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளஇயலாது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு பரிசீலனையின்போது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதும், நிராகரிக்கப்படுவதும், கட்சித் தலைவர்களுக்கு ஒரு விதமாகவும், சுயேட்சைகளுக்கு ஒரு விதமாகவும் கடைபிடிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைகளுக்கு என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதோ, அதே காரணங்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வேட்பு மனுக்களை இணையத்தில் பதிவிறக்கி ஒப்பீடு செய்து பார்த்தபோது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. தலைவர் விஜய், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் வேட்பு மனுக்களில் குறைபாடுகள் உள்ளன.
குறிப்பாக ஸ்டாலினின் புகைப்படத்தின் மீது நோட்டரி முத்திரை மற்றும் கையெழுத்து இல்லை. பாகம் ’5 g’, ’5 e’, ’6 g’, ’7 b3’ ஆகியவற்றில் ஆம், இல்லை என இருக்க வேண்டும். ஆனால் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் பள்ளி படிப்பு விவரங்கள் இடம்பெறவில்லை. சரி பார்ப்பு பகுதியில் உறுதிமொழி அளிப்பவர் என குறிப்பிடாமல், சான்றளிப்பவர் என ஸ்டாலினின் கையெழுத்து இட்டுள்ளார். அவரின் இரண்டாவது வேட்பு மனுவில் குறிப்பு என்ற பக்கமே விடுபட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனுவில் பள்ளிக் கல்வி விவரம் குறிப்பிடப்படவில்லை. கல்லூரி படிப்பு முழு வடிவத்துடன் இல்லை. பாகம் ‘6 g’ உள்ளிட்டவற்றில் ஆம், இல்லை என்பதற்கு பதிலாக பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல த.வெ.க. தலைவர் விஜய் வேட்பு மனுவில் கல்லூரிப் படிப்பு முழு வடிவத்துடன் குறிப்பிடப்படவில்லை. வேட்பு மனுவின் இறுதியில் உள்ள 5 குறிப்புகளின் கீழ் வேட்பாளர் கையொப்பம் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவில் பள்ளிக்கல்வி குறிப்பிடப்படவில்லை. பட்டப்படிப்பின் முழு வடிவம் இல்லை. பயின்ற பல்கலைக்கழகம் குறிப்பிடப்படவில்லை., நோட்டரி வழக்கறிஞரின் பதிவு புத்தகத்தின் விவரம் உள்ள நோட்டரி சர்டிபிகேட் வைக்கவில்லை.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேட்பு மனுவில் வேட்பாளரின் புகைப்படத்திற்கு நோட்டரி முத்திரை, கையெழுத்து இல்லை. பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு விவரம் குறிப்படவில்லை. பக்கம் 5, 6, 11,12, 13 ஆகிய பக்கங்களில் ஆம், இல்லை என்பதற்கு பதிலாக பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல செல்வப்பெருந்தகை மற்றும் பிரேமலதா வேட்பு மனுக்களில் நோட்டரி முத்திரை, கையொப்பம் இல்லை. பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி படிப்பு முழு வடிவத்தில் இல்லை. குறிப்பு பக்கத்தில் வேட்பாளர் கையெழுத்து இல்லை. ஆனால் இதேபோன்ற சிறு சிறு காரணங்களுக்காக கூட சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலருக்கு குறைகளை தெளிவாக சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்து, மனுவை மீண்டும் பெற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் ஆணையமே இவ்வாறு செய்வது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது” என்றார் விரிவாக.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
